5837.

'கடர் கடந்து புகுந்தனை; கண்டகர்
உடர் கடந்தும்நின் ஊழி கடந்திலை;
அடர் கடந்ததிரள் புயத்து ஐய ! நீ
இடர்கள்தந்தனை, வந்து இடர் மேலுமே ?

     நீ கடர் கடந்துபுகுந்தனை - நீ, கடலைக் கடந்துஇங்கு வந்தாய்;
கண்டகர் உடர் கடந்தும் - முள் போன்று கொடியவர்களான பல
அரக்கர்களுடைய உடம்பின் வலிமையை அழித்து வெற்றி கொண்டு நின்றும்;
நின் ஊழி கடந்திலை - உனது வாழ்நாள் ஒழியப் பெற்றிலை (இவ்வாறு);
அடர் கடந்த திரள் புயத்து ஐய ! - பகைவர் வலிமையை வென்ற பருத்த
தோள்களை உடைய ஐயனே ! (நீ அரக்கர்கள் கையில் சிக்கியதனால்); வந்து
இ்டர் மேலும் இடர்கள் தந்தனை -
(கிட்கிந்தையினின்று) இங்கு வந்து
எனக்குத் துன்பத்தின் மேலும் துன்பங்களை உண்டாக்கியவனானாய்.

     இராமபிரானைப்பிரிந்ததனாலான துன்பத்தின் மேலும், இராம தூதன்
பகைவர் கையில் கட்டுண்டதனாலான துன்பம் சேர்ந்து மேன்மேலும்
வருத்துதலால் 'வந்து இடர்கள் மேலும் இடர் தந்தனை என்று பிராட்டி கூறி
வருந்தினாள்.                                            (33)