5839.

'கண்டு போயினை, நீள் நெறி காட்டிட,
"மண்டு போரில் அரக்கனை மாய்த்து, எனைக்
கொண்டு மன்னவன்போம்" எனும் கொள்கையைத்
தண்டினாய்-எனக்குஆர் உயிர் தந்த நீ !'

     எனக்கு ஆருயிர் -எனக்குஅரிய உயிரை; தந்த நீ - அளித்த நீ;
கண்டு போயினை - (இராமபிரான் ஆணைப்படி) என்னைக் கண்டு சென்றாய்
(அதற்கு மேல்); நீள்நெறிகாட்டிட - நீண்ட வழியைக் காட்டிக் கொண்டு நீ
முன் வர; மன்னவன் - தலைவனான இராமபிரான் (இங்குவந்து); மண்டு
போரில் -
அடர்ந்த கடும் போரினிடத்து; அரக்கனை மாய்த்து -
இராவணனைக் கொன்று; எனைக் கொண்டு போம் - என்னைச் சிறை
மீட்டுக் கொண்டு போவான்; எனும் கொள்கையை - என்று நான் நம்பிக்
கொண்டிருந்த கோட்பாட்டை; தண்டினாய் - தவிர்த்து நடந்தாய்
(நீக்கிவிட்டாய்).

     வளர்த்தவனேஅழித்தாற் போல, ஆருயிர் தந்த நீயே, 'இராமபிரான்
என்னை மீட்பான்' என்ற என் நம்பிக்கையை அழித்து விட்டாய் என்றபடி.
தண்டுதல் - தவிர்ந்து செல்லுதல். 'கற்றல் வேண்டுவோன் வழிபாடு தண்டான்'
(முதுமொழிக்காஞ்சி - தண்டாப்பத்து -3) தண்டாய் - திருப்பிவாங்கிக்
கொண்டாய் என்பது பழைய உரை.                            (35)