5840.

ஏயபன்னினள் இன்னன; தன் உயிர்
தேய, கன்றுபிடியுறத் தீங்கு உறு
தாயைப் போல,தளர்ந்து மயர்ந்தனள்-
தீயைச் சுட்டதுஓர் கற்பு எனும் தீயினாள்.

     தீயை சுட்டது ஓர்கற்பு எனும் தீயினாள் - நெருப்பையும் சுட்டு
அவிக்கும் ஒரு கற்பு என்னும் பெரிய தீமை உடைய சீதாபிராட்டி; இன்னன்
ஏய பன்னினள் -
இத்தன்மையான வார்த்தைகளைத் தகுதியாகச்
சொன்னவளாய்; தன் உயிர் தேய கன்று பிடி உற தீங்கு உறும் தாயைப்
போல -
தனது ஆன்மவலி குன்றும்படி தன்கன்று (புலி முதலிய கொடிய
மிருகத்தினிடம்) பிடிபட வருந்தும் தாய்ப்பசுவைப் போன்று; தளர்ந்து
மயர்ந்தனள் -
சோர்வுற்று மயக்கம் அடைந்தாள்.

     'தீயைச் சுட்டதுஓர் கற்பு' - சுட்டது என்பது காலம் கருதாது தன்மை
கருதியதாகும். இது யுத்தகாண்ட இறுதியில் சீதாபிராட்டியின் கற்புச்
சோதனையில் நிரூபிக்கப்படுவதாகும். 'கற்பெனும் தீயினாள்' என்று முடிவது,
அத்தீயே, பின்பு அனுமன் வாலில் இட்ட தீயாக மாறி, இலங்கையைச்
சுடுவதற்குக் காரணமாவதைக் குறிப்பித்தவாறு. 'மடவார் துயர் வீணாகாது'
என்பதற்கு இது ஒரு சான்று.                                   (36)