இந்திரசித்து,அனுமனை அரண்மனையுள் கொண்டு சேர்தல் 

5841.

பெருந் தகைப் பெரியோனைப் பிணித்த போர்
முருந்தன், மற்றைஉலகு ஒரு மூன்றையும்
அருந் தவப்பயனால் அரசு ஆள்கின்றான்
இருந்த, அப்பெருங் கோயில் சென்று எய்தினான்.

     பெருந் தகைப்பெரியோனை - பெருமைக் குணத்திலும்அறிவிலும்
பெரியோனான அனுமனை; பிணித்த போர் முருந்தன் - கட்டிய, போரில்
வல்லவனான இந்திரசித்து; மற்றை உலகு ஒரு மூன்றையும் -
இலங்கையோடல்லாது மற்ற (சுவர்க்கம் பூமி பாதலம்) மூன்று உலகங்களையும்;
அரும் தவப்பயனால் -
தான் முன் செய்த அரிய தவப் பயனால்; அரசு
ஆள்கின்றான் இருந்த -
அரசனாயிருந்து ஆள்கின்ற இராவணன்
தங்கியிருந்த; அ பெருங் கோயில் - அந்தப் பெரிய அரண்மனையில்;
சென்று எய்தினான் -
சென்று அடைந்தான்.

    இராவணன்தங்கியிருந்த அரண்மனைக்கு, இந்திரசித்து, அனுமனைக்
கட்டிய நிலையில் கொண்டு சென்றான் என்பதாம். முகுந்தன் - சமர்த்தன்;
திறமை வாய்ந்தவன். முருந்து - பறவைகளின் வலிய அடிக் குருத்து.
பறவையின் அடிக்குருத்து போன்று, இராவணனுக்கு உதவுபவன் இந்திரசித்து
என்பது கருத்து.                                             (37)