5845. | மரகதக்கொழுங் கதிரொடு மாணிக்க நெடு வாள் நரக தேயத்துள்நடுக்குறா இருளையும் நக்க, சிரம்அனைத்தையும் திசைதொறும் திசைதொறும் செலுத்தி, உரகர்கோன்இனிது அரசு வீற்றிருந்தனன் ஒப்ப, | மரகதம் தொழும்கதிரொடு மாணிக்க நெடுவாள் - (தன்முடிகளிலுள்ள) மரகதங்களின் செழுமையான ஒளிகளுடனே மாணிக்கங்களின் நீண்ட ஒளியும்; நரக தேயத்துள் நடுக்குறா இருளையும் நக்க - நரகலோகத்தினுள்ளே (எச்சுடர்க்கும்) அஞ்சாது நிறைந்திருக்கின்ற இருளையும் தாவி விழுங்க; சிரம் அனைத்தையும் திசைதொறும் திசை தொறும் செலுத்தி - தன்பத்துத் தலையையும், எல்லாத்திசைகளிலும் செல்லுமாறு பரப்பிக் கொண்டு; உரகர் கோன் இனிது அரசு வீற்றிருந்தனன் ஒப்ப - பாம்புகளுக்கு அரசனான ஆதிசேடன் மகிழ்ச்சியோடு அரசு கட்டிலில் வீற்றிருந்தது போல் விளங்கவும். இராவணன்ஆதிசேடனுக்கு ஒப்பாக வீற்றிருந்தான் என்க. இராவணன் பத்துத்தலைகளை உடையவனாதலால், ஆயிரம் தலைகளை உடைய ஆதிசேடனுக் கு உவமையாக்கப் பெற்றான். நரகலோகம் எப்போதும் இருளால் மூடப்பட்டிருக்கும் என்பதை, அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும்' 121. (பரி - உரை-) என்ற குறளாலும் உணரலாம். (41) |