5846. | குவித்தபல் மணிக் குப்பைகள் கலையொடும் கொழிப்ப, சவிச் சுடர்க்கலன் அணிந்த பொன் தோளொடு தயங்க, புவித் தடம்படர் மேருவைப் பொன் முடி என்னக் கவித்து, மால்இருங் கருங்கடல் இருந்தது கடுப்ப, |
குவித்த பல் மணிகுப்பைகள் - தொகுத்துப் பதிக்கப்பெற்ற பலவகையான இரத்தினங்களின் தொகுதிகள்; கலையொடும் கொழிப்ப சவி சுடர்கலன் - மேலாடையுடன் புரண்டு விளங்கவும், ஒளியின் சுடரை வீசும் ஆபரணங்கள்; அணிந்த - (தம்மை) அணிந்துள்ள; பொன்தோளொடு - அழகிய தோள்களோடு; தயங்க - (அமைந்து) விளங்கவும், (அதனால்); மால் இரும் கரும் கடல் - மிகப் பெரிய கரிய கடலானது; புவி தடம் படர் மேருவை பொன் முடி என்ன கவித்து இருந்தது கடுப்ப - பூமியினிடத்துப் படர்ந்து விளங்கும், மேருமலையை பொன்முடியாகக் கவித்துக் கொண்டு வீற்றிருந்தது போல் விளங்கவும். மால்இருங்கருங்கடல், மேருவை முடியாகக் கவித்துக் கொண்டு வீற்றிருந்தது போல, இராவணன் வீற்றிருந்தான் என்பதாம். இராவணனுக்குக்கருங்கடலும், அவன் தோற்றத்துக்கு மேருமலையும் உவமைகளாயின. (42) |