5847. | சிந்துராகத்தின் செறி துகில் கச்சொடு செறிய, பந்தி வெண்முத்தின் அணிகலன் முழு நிலாப் பரப்ப, இந்து வெண்குடைநீழலில், தாரகைஇனம் பூண்டு, அந்தி வான்உடுத்து, அல்லு வீற்றிருந்ததாம் என்ன, |
சிந்துராகத்தின் செறி துகில் கச்சொடு செறிய - சிவப்பு நிறம் செறிந்த ஆடை அரைக்கச் சுடனே கூடி விளங்க; பந்தி வெண்முத்தின் அணிகலன் முழு நிலா பரப்ப - வரிசையாகக் கோக்கப் பெற்ற முத்துக்களால் ஆகிய மாலை முதலிய ஆபரணங்கள் பூர்ண சந்திரனது நிலவைப் போன்ற ஒளியைப் பரவச் செய்ய, (அதனால்); அல்லு அந்தி வான் உடுத்து தாரகை இனம் பூண்டு இந்து வெண்குடை நீழலில் வீற்றிருந்தது ஆம் என்ன - இருளானது செவ்வானத்தை ஆடையாக உடுத்திக் கொண்டு, நட்சத்திரத்தின் கூட்டங்களை ஆபரணமாகத் தரித்து, சந்திரனாகிய வெண் கொற்றக் குடையின் நிழலிலே, கொலு வீற்றிருந்தது என்று சொல்லும்படியும். இராவணனதுதோற்றம், இருளானது, செவ்வானத்தை ஆடையாக உடுத்தும், நட்சத்திரக் கூட்டங்களை ஆபரணமாகத் தரித்துக் கொண்டும், சந்திரனாகிய வெண்குடை நிழலில் ஓலக்கம் இருந்த காட்சி போன்று இருந்தது என்பதாம். (43) |