5851. | நரம்புகண்ணகத்துள் உறை நறை, நிறை பாண்டில் நிரம்புசில்லரிப் பாணியும், குறடும், நின்று இசைப்ப, அரம்பைமங்கையர் அமிழ்து உகுத்தாலன்ன பாடல் வரம்பு இல்இன்னிசை, செவிதொறும் செவிதொறும் வழங்க.* |
நரம்பு கண்அகத்து உள் உறை நறை - நரம்புக் கருவியாகிய வீணைமுதலிய இசைக்கருவிகளினிடத்து உள்ளே தங்கியுள்ள இசையாகிய தேனும்;நிறை பாண்டில் - இலக்கணம் நிறைந்த கஞ்சக் கருவியும்; நிரம்பு சில்லரிபாணியும் - நிரம்பிய சில்லரி என்னும் வாத்தியத்தாளமும்; குறடும் - குறடுஎன்னும் தாளக் கருவியும்; நின்று இசைப்ப - இடையறாது நிலை நின்று ஒலிக்கவும்; அரம்பை மங்கையர் அமிழ்து உகுத்தால் அன்ன பாடல் - தேவமகளிர் அமிழ்தத்தைச் சிந்தினால் போன்ற வாய்ப்பாட்டினது; வரம்பு இல் இன்னிசை - அளவிறந்த இனிமையை உடைய இசையை; செவி தொறும் செவி தொறும் வழங்க - தனது இருபது காதுகளிலும் வந்து சொரியவும். நறை, பாண்டில்,பாணி, குறடு என்பவை நின்று இசைப்ப, அரம்பை மங்கையர் பாடல் இசை செவி தொறும் செவி தொறும் வயங்க என்க. பாணி - கை; அதனால் வரையறுத்து இடப்படுகிற தாளத்துக்கு இலக்கணை. பாடல் இன்னிசை - வாய்ப்பாட்டின் இனிய கீதம்; நறை - இசைத்தேன். (47) |