5852. | கூடு பாணியின் இசையொடும், முழவொடும் கூட, தோடு சீறுஅடிவிழி மனம் கையொடு தொடரும் ஆடல்நோக்குறின், அருந் தவ முனிவர்க்கும் அமைந்த வீடு மீட்குறும்மேனகைமேல், நகை விளங்க.+ |
பாணியின் கூடு -தாளத்தோடு கூடிய; இசையொடும் - பாட்டுடனும்; முழவொடும் - மத்தள ஒலியுடனும்; கூட - மாறுபடாது ஒத்துவருமாறு; தோடு சீறு அடி - பூவிதழினும் மேம்பட்ட சிறிய பாதச் சதிவரிசை; விழி மனம் கையொடு தொடரும் - விழிப்பார்வை, அதிலேயே ஒன்றிய மனம், கையினால் காட்டும் அபிநயக் குறிகள் ஆகியவை ஒன்றாக அமைந்த; ஆடல் நோக்குறின் அரும் தவமுனிவர்க்கும் - நாட்டியத்தைப் பார்த்தால், அருமையான தவத்தைச் செய்கின்ற முனிவர்களும்; அமைந்த வீடு மீட்குறும் - (தமக்கு) உளதாகும் முத்தியின்பத்தைக் கைவிட்டு (தன்மேல்) மனம் திரும்பும் படிச் செய்கின்ற; மேனகை மேல் - மேனகை என்னும் தேவமாதின் மேல்; நகைவிளங்க - மகி்ழ்ச்சியால் சிரிப்புத் தோன்றவும். அருந்தவமுனிவரையும் தன் பால் இழுக்கும் வண்ணம் நாட்டியம் ஆடும் மேனகையைத் தன் அருகில் கண்டு மகிழ்ச்சியுடன் இருந்தான் இராவணன் என்பது கருத்து. (48) |