5854.

தேவரோடுஇருந்து அரசியல் ஒரு முகம் செலுத்த,
மூவரோடு மாமந்திரம் ஒரு முகம் முயல,
பாவகாரிதன்பாவகம் ஒரு முகம் பயில,
பூவை சானகிஉருவெளி ஒரு முகம் பொருந்த,

     ஒரு முகம்தேவரோடு இருந்து அரசியல் செலுத்த - ஒரு முகம்
(தன் கீழ்க்குடிகளாகிய) தேவர்களுடன் கலந்து அரசாட்சி ஆணைகளைச்
செலுத்தவும்; ஒரு முகம் மூவரோடு மாமந்திரம் முயல - மற்றொரு முகம்,
மந்திரி, சேனாபதி, அரசியல்தலைவர் என்ற  மூவருடன்  மாட்சியுற்ற
மந்திராலோசனைகளில் முயன்றிருக்கவும்; ஒருமுகம் பாவகாரிதன் பாவகம்
பயில -
 மற்றொரு முகம், தீவினை செய்பவனான அவனுடைய
நினைவுகளைச் சிந்தனை செய்யவும்; ஒரு முகம் பூவை சானகி உருவெளி
பொருந்த -
மற்றொரு முகம், கிளி போன்றவளான பிராட்டியின் உருவெளித்
தோற்றத்தில் பொருந்தி நிற்கவும்.

     இராவணனதுமுகங்களின் செயல்பாடுகள் கூறப்பட்டன. பாவகாரி -
தீவினை; 'பாவ காரிகளைப் படைத்தவன்' (பெரியாழ் 5 திருமொழி - 4.1) (50)