5855.

'காந்தள்மெல் விரல் சனகிதன் கற்பு எனும் கடலை
நீந்தி ஏறுவதுஎங்ஙன் ?' என்று ஒரு முகம் நினைய,
சாந்து அளாவியகொங்கை நன் மகளிர்
                              தற்சூழ்ந்தார்
ஏந்தும் ஆடியின்ஒரு முகம் எழிலினை நோக்க,

     ஒரு முகம் -இராவணனுடைய மற்றொரு முகம்; காந்தள் மெல்விரல்
சனகிதன் கற்பு எனும் கடலை -
செங்காந்தள் மலர் போன்ற மென்மையான
விரல்களை உடைய சீதையின் கற்பு என்ற கடலை; நீந்தி ஏறுவது எங்ஙன்
என்று நினைய -
நீந்திக்கரை ஏறுவது எவ்வாறு என்று நினைத்து
ஏக்கமுறவும்; ஒரு முகம் - மற்றொருமுகம்; சாந்து அளாவிய கொங்கை
நன் மகளிர் -
சந்தனம் பூசிய கொங்கைகளை உடைய அழகிய மாதர்கள்
பலர்; தன் சூழ்ந்தார் ஏந்தும் ஆழியின் - தன்னைச் சூழ்ந்து கொண்டு
கையில் தாங்கிக் காட்டுகின்ற கண்ணாடியில்; எழிலினை நோக்க - தனது
அழகினைப் பார்க்கவும்.

      'கற்பெனும் கடலைநீந்தி ஏறுவது' என்றது உருவகம். சீதையை
அபகரித்து வருவதற்குக் கருங்கடலைக் கடந்தது எளிதாயிற்று; ஆனால்,
சீதையின் கற்புக் கடலைக் கடப்பது அரிது என்பது உணர்த்தப்பட்டது.
இராவணன், பிராட்டியின் மேனியைக் கொணர்ந்து வரலாம்; ஆனால் அவளது
ஆன்ம குணங்களை வசப்படுத்த முடியாது என்பது குறிப்பு. பிராட்டியை
வசப்படுத்தற்கேற்ற அழகு, தனக்கு இருக்கிறதா என்று ஒருமுகம், மகளிர்
ஏந்திய கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருந்தது என்க.              (51)