5856. | பொதும்பர்வைகு தேன் புக்கு அருந்துதற்கு அகம் புலரும் மதம் பெய் வண்டுஎனச் சனகிமேல் மனம் செல, மறுகி வெதும்புவார், அகம் வெந்து அழிவார், நகில் விழி நீர் ததும்புவார்,விழித் தாரை வேல், தோள்தொறும் தாக்க.+ |
பொதும்பர்வைகுதேன் - மரச் செறிவினிடத்துஉள்ள தேனை; புக்கு அருந்துதற்கு - அங்குப் புகுந்து குடிப்பதற்கு; அகம்புலரும் - (முடியாமல்) மனம் வாடுகிற; மதம் பெய் வண்டு என - களிப்பு மிக்கதொரு வண்டு போல; சனகி மேல் மனம் செல - பிராட்டியினிடத்துத் தன் மனம் போக, (அதனை உணர்ந்து); மறுகி வெதும்புவார் - துன்பமுற்று மனம் வாடுபவர்களும்; அகம் வெந்து அழிவார் - மனம் புழுங்கி மிகவும் வருந்துபவர்களும்; விழி நீர் நகில் ததும்பு வார் - (தமது) கண்களினின்று நீர்ததும்பித் தம் கொங்கைகளிடத்து வழியப் பெற்றவர்களுமான இராவண னுடையகாதல் மகளிரது; விழி தாரை வேல் - கண்களின் வரிசையாகிய வேல்கள்;தோள் தொறும் தாக்க - தனது இருபது தோள்களிலும் வலிந்து பாயவும். மரச் செறிவில்உள்ள தேனை வண்டு அருந்தமுடியாது. அது போன்று அசோகவனத்துப் பிராட்டியை இராவணன் அணுகமுடியாது என்பது கருத்து. இராவணன் மனம் சீதைபால்; அதனால், அவனது காதல் மகளிர்களது கண் பார்வை அவன் தோள்களில் மட்டும் நின்றது என்க. (52) |