5858. | திங்கள்வாள் நுதல் மடந்தையர் சேயரி கிடந்த அம் கயத் தடந்தாமரைக்கு அலரியோன் ஆகி, வெங் கண்வானவர் தானவர் என்று இவர் விரியாப் பொங்கு கைகள்ஆம் தாமரைக்கு இந்துவே போன்று, |
திங்கள் வாள்நுதல் மடந்தையர் - பிறைச்சந்திரன்போன்ற ஒளி பொருந்திய நெற்றியை உடைய மகளிரது; சேய் அரி கிடந்த - சிவந்த இரேகைகள் பரவிக் கிடந்த; அம் கயம் தடம் தாமரைக்கு - அழகிய தடாகத்தில் உள்ள பெரிய தாமரை மலர் போன்ற முகங்களுக்கு; அலரியோன் ஆகி - சூரியனைப் போல மகிழ்ச்சியை உண்டாக்கியும்; வெம் கண் வானவர் தானவர் என்று இவர் - பகைவரான தேவர்கள் அசுரர்கள் என்று சொல்லும் இவர்களுடைய; விரியா பொங்கு கைகள் ஆம்தாமரைக்கு - விரிந்து மலராத விளங்கும் கைகளாகிய தாமரை மலர்களுக்கு; இந்துவே போன்று - சந்திரனே போல விளங்கவும். இராவணன், தன்காதல் மகளிர் முகங்களாகிய தாமரை மலர்களுக்குச் சூரியன் போன்றும், தன் பகைவர்களான வானவர் தானவர்களுடைய கைகளாகிய தாமரைகளுக்குச் சந்திரன் போன்றும் விளங்கினான் என்பதாம். இராவணன் தோற்றம் காதல் மகளிர் முகங்களை மலர வைத்தது. பகைவராகிய தேவர் அசுரர்களைக் குவியவைத்தது. முகமும் தாமரை; கைகளும் தாமரை. ஒரே சமயத்தில் ஒன்று மலரவும் ஒன்று குவியவும் செய்ததால், இராவணன் சூரியனாகவும் சந்திரனாகவும் விளங்கினான் என்ற நயம் உணர்ந்து இன்புறத்தக்கது. (54) |