5861.

'தேவர், தானவர், முதலினர், சேவகன் தேவி
காவல் கண்டுஇவண் இருந்தவர், கண்புலன் கதுவ,
பாவகாரிதன்முடித் தலை பறித்திலென்என்றால்,
ஏவது யான்இனிமேல் செயும் ஆள்வினை ?'
                                என்றான்.

     சேவகன் தேவிகாவல் கண்டு - சிறந்த வீரனானஇராமபிரானுடைய
தேவியாகிய சீதா பிராட்டி சிறைக்காவலில் வைக்கப் பெற்றிருக்கக் கண்டும்,
(மீட்பதற்கு ஆற்றல் இன்றி); இவண் இருந்தவர் - இங்கு வாளாபார்த்துக்
கொண்டிருந்தவர்களான; தேவர் தானவர் முதலினர் - தேவர்கள், அசுரர்கள்

முதலினோருடைய; கண்புலன் கதுவ - கண்களுக்கு நன்றாகத் தெரியுமாறு;
பாவகாரிதன் முடித்தலையான் பறித்திலென் என்றால் - பாவியின் முடிகள்
அணிந்த பத்துத் தலைகளையும் நான் இப்போதே பறித்து எறியேன் என்றால்;
இனிமேல் செய்யும் ஆள்வினை ஏவது ? - இனிமேல் செய்யும் அடிமைத்
தொழில் யாது உள்ளது ? (எதுவும் இல்லை என்றபடி); என்றான் - என்று
வினவிக் கொண்டான்.         

     'பிராட்டியைவஞ்சனையால் கவர்ந்து வந்து சிறைவைத்த பாவகாரியின்
(இராவணனின்) தலைகளைப் பறித்து எறிவதனினும் மேலாக மெய்யடியான்
செய்யத்தக்க உறு தொழிலும் உளதோ ?' என்று அனுமன் தனக்குள் வினவிக்
கொண்டான் என்பதாம்.                                    (57)