| 5863. | 'நீண்டவாள் எயிற்று அரக்கனைக் கண்களின் நேரே காண்டல் வேண்டி,இவ் உயிர் சுமந்து, எதிர் சில கழறி, மீண்ட போதுஉண்டு வசைப்பொருள்; வென்றிலேன் எனினும், மாண்டபோதினும், புகழ் அன்றி மற்றும் ஒன்று உண்டோ ?'+ |
நீண்ட வாள்எயிறு அரக்கனை - நீண்ட வாளாயுதம்போன்று கூரிய பற்களை உடைய இராவணனை; கண்களின் நேரே காண்டல் வேண்டி - நான் கண்களினால் நேராகப் பார்க்கவிரும்பி; இவ்உயிர் சுமந்து - இந்த என் உயிரை உடம்பில் வைத்துக் கொண்டிருந்து, எதிர்சில கழறி - (இவனைக் கண்டபின்) இவன் எதிரிலே சில வார்த்தைகளைச் சொல்லி; மீண்ட போது - திரும்பிச் சென்ற போதும்; வசை பொருள் உண்டு - எனக்குப் பழியாகிய நிந்தனையே ஏற்படும்; வென்றிலேன் எனினும் - (அவ்வாறன்றி இவனை எதிர்த்துப் போர் செய்தால்) இங்கு இவனை வெல்லாவிட்டாலும்; மாண்ட போதினும் - (இவன் கையால்) இறந்தாலும்; புகழ் அன்றி மற்றும் ஒன்று உண்டோ ? - யான் அடைவது புகழே அல்லாமல், வேறு ஒன்று நிகழுமோ ? (புகழே உண்டாகும்; இகழ்ச்சி உண்டாகாது என்றபடி) 'அரக்கனைக்காண்டல் வேண்டி, உயிர் சுமந்து, சில கழறி, மீண்ட போது வசைப் பொருள்தான் உண்டு; அவ்வாறில்லாமல், இவனை எதிர்த்துப் போர் புரிந்தால், வென்றாலும் மாண்டாலும் எனக்கு வருவது புகழே ! இகழ்ச்சியில்லை' என்று அனுமன் கருதினான் என்க. (59) |