5864. | என்று,தோளிடை இறுக்கிய பாசம் இற்று ஏக, குன்றின்மேல் எழுகோள் அரிஏறு என, குதியின் சென்று கூடுவல்என்பது சிந்தனை செய்யா- நின்று,'காரியம் அன்று' என, நீதியின் நினைந்தான். |
என்று - என்று இவ்வாறுஎண்ணி; தோள் இடை இறுக்கிய பாசம் இற்று ஏக - தன் தோள்களில் கட்டியிருக்கிற நாகபாசம் அறுந்து ஒழியும்படி; குன்றின் மேல் எழு கோள் அரி ஏறு என - மலையின் மேல் தாவஎழும்பும் வலிய ஆண்சிங்கம் போல; குதியில் சென்று கூடுவல் என்பது சிந்தனை செய்யாநின்று - ஒரு பாய்ச்சலில் சென்று அவனிடம் சேர்வேன் என்று எண்ணி, பிறகு ஆலோசித்து நின்று; 'காரியம் அன்று' என நீதியின் நினைந்தான் - 'இது நான் செய்யத்தக்க நல்ல காரியம் அன்று' என்று அனுமன் நீதியை ஒட்டிக் கருதுவானாயினான். வலிய பெரியஇராவணனுக்கு, அவன் மேல் பாய எண்ணும் அனுமனுக்கு, அரி ஏறும் உவமைகளாக வந்தன. தான் செய்த ஆலோசனைகள் தன் ஆற்றலுக்கு ஏற்றவையாயினும், இராம தூதனாகச் செயல் படுவதற்கு அது பொருத்தம் அன்று என கண நேரத்தில் அனுமன் மாறி எண்ணத் தொட்கினான் என்க. (60) |