கலி விருத்தம் 5865. | 'கொல்லலாம் வலத்தனும் அல்லன்; கொற்றமும் வெல்லலாம்தரத்தனும் அல்லன்; மேலை நாள் அல் எலாம்திரண்டன நிறத்தன் ஆற்றலை வெல்லலாம்இராமனால்; பிறரும் வெல்வரோ ? |
கொல்லல் ஆம்வலத்தனும் அல்லன் - (இவன்) யாராலும்எளிதில் கொல்லக் கூடிய வலிமை உடையவனும் அல்லன்; கொற்றமும் - இவனது படைப் பெருக்கை நோக்குமிடத்து; வெல்லல் ஆம் தரத்தனும் அல்லன் - எவராலும் வெல்லத்தக்க நிலைமை உடையவனும் அல்லன்; மேலை நாள் - பழங்காலமுதல்; அல் எலாம் திரண்டான நிறத்தன் ஆற்றலை - இருள் முழுதும் ஒருங்குகூடினாற் போன்ற கருநிறம் உடையவனான இராவணனது (வளர்ந்து வந்துள்ள) வலிமையை; இராமனால் வெல்லல் ஆம் - இராமபிரான் ஒருவனால்தான் வெல்லுதல் கூடும்; பிறரும் வெல்வரோ ? - வேறுயாரேனும் இவனை வெல்வார்களோ ? (மாட்டார் என்றபடி). இராவணன்,இராமபிரானால் அன்றி, வேறுயாராலும் கொல்லப் படவோ, வெல்லப்படவோ முடியாதவன் என அனுமன் உணர்ந்தான் என்பது கருத்து. கொற்றம் - படைப் பெருக்கு. 'நீ ஒருவன் மேல் கொற்றம் வைப்பின்' (சீவக. 201) (61) |