5867.

' "ஏழ் உயர் உலகங்கள் யாவும் இன்புற,
பாழி வன்புயங்களோடு அரக்கன் பல் தலை,
பூழியில்புரட்டல் என் பூணிப்பு ஆம்" என,
ஊழியான்விளம்பிய உரையும் ஒன்று உண்டால்.

     ஏழ் உயர்உலகங்கள் யாவும் இன்புற - பூமி முதல் மேலே
உயர்ந்துள்ள ஏழு உலக மக்களும் இன்பம் அடையும் படி; அரக்கன்
பாழிவன் புயங்களோடு பல்தலை பூழியில் புரட்டல் -
இராவணனுடைய
பெரிய வலிய தோள்களையும், பலவான பத்துத் தலைகளையும் புழுதியில்
புரளும்படி வெட்டித்தள்ளுதல்; என் பூணிப்பு ஆம் - நான் மேற்கொண்ட
விரதமாகும்; என - என்று; ஊழியான் விளம்பிய உரையும் ஒன்று உண்டு
-
இராமபிரான் சொல்லியுள்ள சபத உரையும் ஒன்று உள்ளது.

     ஏழ் உயர் உலகம்- பூலோகம். புவர் லோகம், சுவர் லோகம், மக
லோகம், சன லோகம், தவலோகம், சத்திய லோகம். பூணிப்பு - விரதம்;
ஊழியான் - காலத்திற்குத் தலைவன்.                            (63)