5874.

'நேமியோ ? குலிசியோ ? நெடுங் கணிச்சியோ ?
தாமரைக்கிழவனோ ? தறுகண் பல் தலைப்
பூமி தாங்கு ஒருவனோ ?-பொருது முற்றுவான்,
நாமமும் உருவமும்கரந்து நண்ணினாய் !

     நேமியோ ? -(அவன்அனுமனை நோக்கி) சக்கராயுதம் தாங்கிய
திருமாலோ ?; குலிசியோ ? - வச்சிராயுத பாணியான இந்திரனோ ?; நெடும்
கணிச்சியோ ? -
நீண்ட சூலாயுதத்தை உடைய சிவபெருமானோ?; தாமரைக்
கிழவனோ ? -
தாமரை  மலரில் தோன்றிய பிரம்ம தேவனோ ?; தறுகண்
பல்தலை -
அஞ்சாமையும் பல்தலைகளையும் உடைய; பூமிதாங்கு
ஒருவனோ ? -
பூமியைத் தாங்கிக் கொண்டிருக்கும் ஒருவனாகிய
ஆதிசேடனோ ?; பொருது முற்றுவான் - போர்செய்து இந்த இலங்கையை
அழிக்கும் பொருட்டு; நாமமும் உருவமும் கரந்து நண்ணினாய் -
(மேற்கூறிய ஒருவனாய்) பெயரையும் இயற்கை வடிவத்தையும், மறைத்துக்
கொண்டு இங்கு வந்து சேர்ந்தாய்.

    திருமால்முதலியவருள் எவனொருவன் தன் பெயரையும் உருவத்தையும்
மறைத்துக் கொண்டு இந்த வடிவமாக வந்து போர் செய்யலாயினன் என்று
உட்கொண்டு இராவணன் இவ்வாறு கேட்டான் என்க.                (70)