அனுமன் விடை 5878. | 'சொல்லிய அனைவரும் அல்லென்; சொன்ன அப் புல்லிய வலியினோர் ஏவல் பூண்டிலேன்; அல்லி அம்கமலமே அனைய செங் கண் ஓர் வில்லிதன் தூதன்யான்; இலங்கை மேயினேன். |
(யான்) சொல்லியஅனைவரும் - நீ சொன்னயாரும்; அல்லென் - அல்லன்; சொன்ன - உன்னால் சொல்லப்பட்டவர்களான; அப்புல்லிய வலியினோர் ஏவல் பூண்டிலேன் - அந்த அற்ப வலிமையுள்ளவர்களுடைய கட்டளையை ஏற்று வந்தேனும் அல்லேன்; அல்லி அம் கமலமே அனைய செங்கண் - அகவிதழ்கள் நிறைந்த அழகிய செந்தாமரை மலர் போன்ற கண்களை உடைய; ஓர் வில்லிதன் தூதன் - ஒப்பற்ற ஒரு வில் வீரனது தூதனாக; யான் இலங்கை மேயினேன் - நான் இலங்காபுரிக்கு வந்தேன். 'மும்மூர்த்திகள்முதலியோரது ஆணைகளையும் ஏற்காத யான், இராமதூதனாய் இங்கு வந்தேன்' என்று தனது திறத்தையும் இராம பக்தியையும் வெளியிட்டான் அனுமன். மும் மூர்த்திகளுக்கும் மேம்பட்ட பரம் பொருளே, இராமபிரானாக அவதாரம் செய்துள்ளது என்பது அனுமனது துணிவு. (74) |