5881.

'தேவரும் பிறரும் அல்லன்; திசைக் களிறு அல்லன்;
                           திக்கின்
காவலர் அல்லன்;ஈசன் கைலைஅம்கிரியும் அல்லன்;
மூவரும் அல்லன்;மற்றை முனிவரும் அல்லன்;
                           எல்லைப்
பூவலயத்தை ஆண்டபுரவலன் புதல்வன் போலாம்;

     தேவரும்பிறரும் அல்லன் - (அந்தவில் வீரன்) தேவர்களும் மற்றை
அசுரர்கள் முதலியோரும் அல்லன்; திசைக்களிறு அல்லன் - திக்கயங்களில்
ஒன்றும் அல்லன்; திக்கின் காவலர் அல்லன் - திக்பாலகர்களில்ஒருவனும்
அல்லன்; ஈசன் கைலை அம் கிரியும் அல்லன் - சிவபிரானுடைய கைலை
என்னும் அழகிய மலையும் அல்லன்; மூவரும் அல்லன் - மும்மூர்த்திகளும்
அல்லன்; மற்றை முனிவரும் அல்லன் - மற்றைய முனிவர்களும் அல்லன்;
எல்லை பூவலயத்தை ஆண்ட -
பூமியின் எல்லை எவ்வளவு உண்டோ
அவ்வளவையும் அரசாட்சி செய்த; புரவலன் புதல்வன் போலாம் - ஒரு
பேரரசனுடைய குமாரனேதான் அவன்.

    அந்தவில்வீரன், உன்னால் வெல்லப்பட்ட தேவர் முதலியோர் அல்லன்;
வெல்லப்படாத ஒரு சக்கரவர்த்தியின் புதல்வன் என்றவாது, இராவணனிடம்
தோற்றவர்களும், தோற்றவைகளும், அவனை வெல்வதற்கு பழி வாங்குவதற்கு
வேற்றுருவம் கொண்டு வந்தவன் அல்லன் இந்தவில் வீரன் என்பது கருத்து.
                                                     (77)