5882. | 'போதமும்,பொருந்து கேள்விப் புரை அறு பயனும், பொய் தீர் மா தவம்சார்ந்த தீரா வரங்களும், மற்றும், முற்றும், யாது அவன்நினைத்தான், அன்ன பயத்தன; ஏது வேண்டின், வேதமும் அறனும்சொல்லும்; மெய் அறமூர்த்தி, வில்லோன்; |
போதமும் -மெய்ஞ்ஞானமும்; பொருந்து கேள்வி - அந்த ஞானத்தோடு பொருந்தியனவாய்க் கேட்கப்பட்ட நூற்பொருளின்; புரை அறு பயனும் - குற்றமற்ற நற்பயன்களும்; பொய் தீர் மாதவம் சார்ந்த - பொய்ம்மையில்லாத பெரிய தவத்தைச் செய்து பெறுகின்ற; தீரா வரங்களும் மற்றும் முற்றும் - நீங்காத வரங்களும் மற்றும் எல்லாம்; அவன் யாது நினைந்தான் அன்னபயத்தன - அவன் என்ன நினைத்தானோ அவ்வாறு பயனளிக்கக் கூடியனவாய் அமைவன ஆயின; வில்லோன் - யான் கூறிய அந்த வில்வீரன்; வேதமும் அறமும் சொல்லும் மெய் அறமூர்த்தி - வேதமும் அறக்கடவுளும் புகழ்ந்து சொல்லும் உண்மைத் தருமசொரூபியான பரம் பொருளே ஆவான். போதம் முதலியயாவும், பரம்பொருளாகிய கடவுளின் ஆணைப்படி நடப்பன என்பதும், அப் பரம் பொருளே இவ்வில்லோன் என்பதும், இவன் நினைத்தமாத்திரத்தில், இராவணன் பெற்றுள்ள சிறப்புக்கள் அனைத்தும் அழியும் என்பதும் இதனால் இராவணனுக்குஉணர்த்தப்பட்டன என்க. கேள்விப்புரை அறுபயன்கள்;- நற்குண நற்செய்கைகள். (78) |