5883. | 'காரணம்கேட்டிஆயின், கடை இலா மறையின்கண்ணும், ஆரணம்காட்டமாட்டா அறிவினுக்கு அறிவும், அன்னோன்; போர் அணங்குஇடங்கர் கவ்வ, பொது நின்று, "முதலே" என்ற வாரணம் காக்கவந்தான்; அமரரைக் காக்க வந்தான்; |
காரணம் கேட்டிஆயின் - அந்த முழுமுதற் பொருள் ஒரு அரசனுக்குமகனாகத் தோன்றுவதற்குக் காரணம் என்ன வென்று கேட்பாயானால்; கடைஇலா மறையின் கண் ஆரணமும் - முடிவில்லாத (அனந்தமான)வேதங்களிடத்துள்ள உபநிடதங்களும்; காட்டமாட்டா - இவன் இத்தன்மையன்என்று முழுவதும் அறிவிக்க முடியாதவனும்; அறிவுக்கு அறிவும் அன்னோன்- எல்லாப் பொருள் தன்மைகளையும் அறிகின்ற அறிவானவனும் ஆகியபரம்பொருள்; போர் அணங்கு இடங்கர் கவ்வ - (அன்று) போரிட்டுஎதிர்த்துத் துன்பத்தைத் தரும் முதலை கவ்விக்கொள்ள, (அதனால் வருந்தி);பொதுநின்று முதலே என்ற - (இன்ன கடவுள் என்று பெயர் குறிப்பிடாமல்)பொதுப் பட ஆதிமூலமே என்று கூவி அழைத்து நின்ற; வாரணம் காக்கவந்தான் - யானையை (கஜேந்திரனை) பாதுகாப்பதற்கு ஓடி வந்தான்;அமரரைக் காக்க வந்தான் - (இன்று) தேவர்களைப் பாதுகாப்பதற்குஅவதரித்துள்ளான். கடை இலாமறையின் ஆரணமும் காட்ட மாட்டாதவனும், அறிவினுக்கு அறிவும் அன்னோனு மாகிய பரம் பொருளே, அன்று, வாரணம் காக்க வந்தான், இன்று (இப்பொழுது) அமரரைக்காக்க வந்தான் என்று இராவணனுக்கு அனுமான் உணர்த்தினான் என்க. ஆரணம் - வேதத்தின் ஞானகாண்டமாகிய உபநிடதம். காட்டுதல் - அறிவித்தல். (79) |