இராவணன்,வாலியின் நலன் உசாவலும் அனுமன் விடையும் 

5887.

என்றலும்,இலங்கை வேந்தன், எயிற்றினம் எழிலி
                            நாப்பண்
மின் திரிந்தென்ன நக்கு, 'வாலி சேய் விடுத்த தூத !
வன் திறல் ஆயவாலி வலியன்கொல் ? அரசின்
                            வாழ்க்கை
நன்றுகொல் ?'என்னலோடும், நாயகன் தூதன்
                            நக்கான்.

     என்றலும் இலங்கைவேந்தன் - என்று அனுமான்கூறியவுடன்,
இராவணன்; எயிறு இனம் - தனது பல்வரிசைகள்; எழிலி நாப்பண் மின்
திரிந்து என்ன நக்கு -
மேகங்களினிடையே மின்னல் உலாவினாற் போலச்
சிரித்து, (அனுமனை நோக்கி); வாலி சேய் விடுத்த தூத - வாலிமகன்
அனுப்ப வந்த தூதனே !; வன் திறல் ஆயவாலி வலியன் கொல் - மிக்க
வலிமை உடையவனான வாலி நலமும் வலிமையும் உடையவனாய்
வாழ்கின்றானா ?; அரசின் வாழ்க்கை நன்று கொல் என்னலோடும் -
அவனுடைய அரசாட்சி நன்கு நடைபெற்று வருகின்றதா ? என்று கேட்டவுடன்;
நாயகன் தூதன் நக்கான் - அனைத்துக்கும் தலைவனான இராமபிரானது
தூதனாகிய அனுமான் சிரித்தான்.

     என்றலும்,இலங்கை வேந்தன் நக்கு, வாலி சேய் விடுத்த தூத ! வாலி
வலியன் கொல் ? நன்று கொல் ? என்னலலோடும் தூதன் நக்கான் என்க.
இராவணனும் நக்கான்; அனுமனும் நக்கான். இரண்டு சிரிப்புக்கும் வேறுபாடு
உண்டு. ஒன்று கோபஉணர்வால் வெளிப்பட்டது. மற்றொன்று ஏளனத்தால்
வந்தது.                                                   (83)