| 5890. | 'தேவியை நாடி வந்த செங்கணாற்கு, எங்கள் கோமான், ஆவி ஒன்று ஆகநட்டான்; "அருந் துயர் துடைத்தி" என்ன, ஓவியர்க்கு எழுதஒண்ணா உருவத்தன், உருமையோடும் கோ இயல்செல்வம் முன்னே கொடுத்து, வாலியையும் கொன்றான். |
தேவியை நாடிவந்த செங்கணாற்கு - தனது தேவியாகியசீதையைத் தேடித் கொண்டு வந்த, சிவந்த கண்களை உடைய இராமபிரானுக்கு; எங்கள் கோமான் - எங்கள் தலைவனான சுக்கீரீவன்; ஆவி ஒன்று ஆக நட்டான் - இருவர்க்கும் ஓர் உயிர் போல நட்புக்கொண்டவனாகி; அரும் துயர் துடைத்தி என்ன - (எனக்கு வாலியால் ஏற்பட்டுள்ள) போக்குதற்கு அரிய துன்பத்தைப் போக்கியருளுக என்று வேண்டிக்கொள்ள; ஓவியர்க்கு எழுத ஒண்ணா உருவத்தன் - சித்திரம் தீட்டுதலில் வல்லவர்க்கும் எழுத முடியாத வடிவழகு உடைய இராமபிரான்; உருமை யோடும் கோஇயல் செல்வம் முன்னே கொடுத்து - சுக்கிரீவன் மனைவியாகிய, ருமையையும், வானர அரசினுக்கு உரிய செல்வத்தையும் முன்னதாக அவனுக்கு அளிப்பதாக வாக்குறுதி கொடுத்து; வாலியையும் கொன்றான் - பிறகு வாலியையும் அழித்து விட்டான். கவரப்பட்டமனைவியை உரியவனுக்கே தந்த வள்ளல், தன் மனைவியைப் பிறன் கவரப் பார்த்திருப்பானோ ? உறுதியாக மீட்பான் என்ற உண்மையை இராவணனுக்குக் குறிப்பாக உணர்த்துகின்றான் அனுமான். (86) |