5893.

'தம்முனைக்கொல்வித்து, அன்னாற் கொன்றவற்கு
                               அன்பு சான்ற
உம் இனத்தலைவன் ஏவ, யாது எமக்கு
                            உரைக்கலுற்றது ?
எம் முனைத் தூதுவந்தாய் ! இகல் புரி தன்மை
                            என்னை ?
நும்மினைக்கொல்லாம்; நெஞ்சம் அஞ்சலை;
                            நுவல்தி' என்றான்.

     தம்முனைக்கொல்வித்து - 'தனது தமையனை(இராமனைக் கொண்டு)
கொல்லச்செய்து; அன்னான் கொன்றவற்கு அன்பு சான்ற - அந்தத்
தமையனைக் கொன்ற இராமனிடம் அன்பு மேற்கொண்ட; உம் இன தலைவன்
ஏவ -
உங்கள் கூட்டத்துக்குத் தலைவனான சுக்கிரீவன் அனுப்ப; எமக்கு
உரைக்கல் உற்றது யாது ? -
நீ எனக்குச் சொல்ல வந்தது என்ன ?
(மேலும்); எம் முனை தூது வந்தாய் இகல் புரி தன்மை என்னை - எமது
முன்னிலையில்
 தூதனாக வந்த நீ,போர் செய்த காரணம் யாது ? நும்மினைக்
கொல்லாம் -
தூதுவனாய் வந்த உன்னைக் கொல்லமாட்டோம்; நெஞ்சம்
அஞ்சலை நுவல்தி என்றான் -
மனம் பயப்படாமல் உண்மையைத்
தெளிவாகக் கூறுவாய்' என்று அனுமனை நோக்கி இராவணன் கூறினான்.

     'தூதனாக வந்தநீ, என்னிடத்தில் நேரில் வந்து தூது மொழி கூறாமல்,
போர் செய்த காரணம் என்ன ?' என்பது இராவணனது கேள்வி.       (89)