அனுமன் இராவணனைநோக்கி உரைத்தல்

கலிவிருத்தம் 

5894.

துணர்த்ததாரவன் சொல்லிய சொற்களைப்
புணர்த்துநோக்கி, 'பொது நின்ற நீதியை
உணர்த்தினால்,அது உறும்' என, உன்ன அருங்
குணத்தினானும்,இனையன கூறினான்:

     உன்ன அருங்குணத்தினானும் - (இத்தன்மையன் என்று)
நினைத்தற்கும் அருமையான நற்குணங்களை உடைய அனுமனும்; துணர்த்த
தாரவன் -
பூங்கொத்துக்களால் ஆகிய மாலையை அணிந்த இராவணன்;
சொல்லிய சொற்களை
 - இவ்வாறு கூறிய வார்த்தைகளை; புணர்த்து
நோக்கி -
தொகுத்து ஆலோசித்துப் பார்த்து; பொது நின்ற நீதியை -
'எல்லோர்க்கும் பொதுவாக உள்ள நீதி மொழிகளை; உணர்த்தினால் -
இப்போது எடுத்துக் கூறினால், அது உறும் என - அது தக்கதாகும்' என்று
எண்ணி, இனையன கூறினான் - இந்த வார்த்தைகளைச் சொல்லலானான்.

     இனிவரும் பதினாறுகவிதைகள், அனுமன் கூறிய நீதிகளைத்
தெரிவிப்பன.                                                (90)