5895.

'தூது வந்தது, சூரியன் கான்முளை
ஏது ஒன்றிய நீதிஇயைந்தன;
சாது என்றுஉணர்கிற்றியேல், தக்கன,
கோது இறந்தன,நின் வயின் கூறுவாம்;

     சூரியன் கான்முளைதூது வந்தது - யான், இங்கு,சூரியகுமாரனான
சுக்கிரீவனது தூதாக வந்தது ஆகும்; (நான் சொல்லுவன) எது ஒன்றிய -
தக்ககாரணங்கள் பொருந்தியவையும்;
 நீதி இயைந்தன - நீதியோடு
கூடியவையும்; தக்கன - உன் நன்மைக்கு ஏற்றவையும்; கோது இறந்தன -
குற்றமற்றவையும் ஆகும்; சாது என்று உணர் கிற்றியேல் - அவை
நல்லனவே என்று நீ உணர்வாயானால்; நின்வயின் கூறுவாம் -
உன்னிடத்தில் சொல்வேன்.

     கான்முளை (கால்- முளை) பரம்பரையில் தோன்றினவன்; புத்திரன். (91)