5900.

' "திறம்திறம்பிய காமச் செருக்கினால்
மறந்து, தம்தம்மதியின் மயங்கினார்,
இறந்து இறந்து,இழிந்து ஏறுவதே அலால்,
அறம்திறம்பினர், ஆர் உளர் ஆயினார் ?

     திறம் திறம்பியகாமச் செருக்கினால் - முறைமை தவறிய காமக்
களிப்பால் (சிற்றின்ப அகந்தையால்); மறந்து தம்தம் மதியின் மயங்கினார் -
நல்வழிகளை மறந்துவிட்டு, தங்கள் தங்கள் அறிவிலே மயக்கம்
கொண்டவர்கள்; இறந்து இறந்து இழிந்து ஏறுவதே அலால் - செத்துச்
செத்தும் இழிந்தும் ஏறியும் இவ்வாறு மாறி மாறி வருவது அன்றி; அறம்
திறம்பினர் ஆர் உளர் ஆயினார் -
(அவ்வாறு) அறவழியை மீறி (மாறி)
நடந்தவர் யார் நன்னிலையில் நிற்பவராக இருந்தார்கள் ? (ஒருவரும் இல்லை
என்றபடி).

     திறம் திறம்பியகாமச் செருக்கு - தம் மனைவியிடத்து இன்பம்
நுகர்தலாகிய முறைமை நீங்கி, பிறன் மனை நயக்கும் காமக் களிப்பு.    (96)