5901.

' "நாமத்துஆழ் கடல் ஞாலத்து அவிந்தவர்,
ஈமத்தால்மறைந்தார், இள மாதர்பால்
காமத்தால்இறந்தார், களி வண்டு உறை
தாமத் தாரினர்,எண்ணினும் சால்வரோ ?

     நாமத்து ஆழ்கடல்ஞாலத்து - அச்சம் தரத்தக்கஆழ்ந்த கடல்
சூழ்ந்த இந்த நில உலகில்; இள மாதர் பால் காமத்தால் இறந்தார் -
இளமகளிரிடம் கொண்ட மோகத்தால் வரம்பு கடந்து நடந்தவரான; களி
வண்டு உறை தாமம் தாரினர் -
(தேனைப்பருகியதால்) களிப்புக் கொண்ட
வண்டுகள் மொய்க்கும் மலர் மாலை அணிந்த ஆடவர்கள்; அவிந்தவர்
ஈமத்தால் மறைந்தார் எண்ணினும் சால்வரோ -
புகழ் முதலிய யாவும்
அவிந்தவராய், சுடுகாட்டு நெருப்பால் அழிந்து போனவர்கள் எண்ணிக்கையில்
அடங்குவார்களோ ? (எண்ணற்றவராவர் என்றபடி).

     இஞ்ஞாலத்தில்,காமத்தால், இறந்தவர், அவிந்தவராகி, ஈமத்தால்
மறைந்தவர் எண்ணற்றவர் என்றபடி. களி வண்டுறை தாமத்தாரினர்;
அரசர்களைக் குறித்தது.                                    (97)