5904. | ' "ஓதநீர் உலகு ஆண்டவர், உன் துணைப் போத நீதியர்,ஆர் உளர் போயினார் ? வேத நீதி விதிவழி மேல்வரும் காதல் நீ,அறத்து எல்லை கடத்தியோ ? |
ஓதம் நீர் உலகுஆண்டவர் போயினார் - அலைகளோடு கூடிய நீரை உடைய கடலால் சூழப்பட்ட இந்த உலகத்தை அரசாட்சி செய்து, பின் இறந்த அரசர்களுள்; உன் துணை போதம் நீதியர், ஆர் உளர் - உன் அளவு அறிவும் நீதியும் பெற்றவர் யார் இருக்கின்றார் ?; வேதம் நீதி விதி வழி மேல் வரும் காதல் நீ - வேதங்களில் கூறப்பட்ட நியாயமான முறைமைவழியிலே முன்னேறிச் செல்வதில் விருப்பம் கொண்ட நீ; அறத்து எல்லைகடத்தியோ ? தருமத்தின் வரையறையைக் கடந்து ஒழுகக்கடவையோ ?(அல்லை என்றபடி); இராவணன்படித்துக் கெட்டவன் என்றும் நீதி தெரிந்து கெட்டவன் என்றும் உணர்த்தப்பட்டது. போதம் - அறிவு. (100) |