5907. | ' "புரம் பிழைப்பு அருந் தீப் புகப் பொங்கியோன், நரம்பு இழைத்தனபாடலின் நல்கிய வரம்பிழைக்கும்; மறை பிழையாதவன் சரம் பிழைக்கும்என்று எண்ணுதல் சாலுமோ ? |
புரம் பிழைப்புஅரும் தீபுக பொங்கி யோன் - திரிபுரங்களும் தப்புதற்கு அரிய நெருப்பு மண்டி அழிக்குமாறு, கோபித்த சிவபெருமான்; நரம்பு இழைத்தன பாடலின் - உன்கை நரம்புகளைக் கொண்டு நீ பாடிய பாடல்களுக்காக; நல்கிய வரம் பிழைக்கும் - மனம் உவந்து கொடுத்தருளிய வரமானது தவறினாலும் தவறும்; மறை பிழையாதவன் - வேத நெறி தவறாதவனான இராமபிரானுடைய; சரம் பிழைக்கும் என்று எண்ணுதல் சாலுமோ ? - அம்பு தவறிப் போகும் என்று நினைத்தல் பொருந்துமோ ? (பொருந்தாது என்றபடி); சிவபெருமான் இராவணனுக்குத் தந்த வரம் தவறினாலும் தவறலாம்; ஆனால் இராமபிரானுடைய அம்பு தன் குறியினின்றும் தவறாது என்பதாம். (103) |