5912. | 'குரக்கு வார்த்தையும், மானிடர் கொற்றமும், இருக்க; நிற்க;நீ, என்கொல், அடா ! இரும் புரத்தினுள் தரும்தூது புகுந்தபின் அரக்கரைக்கொன்றது ? அஃது உரையாய் !' என்றான். |
குரக்குவார்த்தையும் - குரங்காகியசுக்கிரீவன் கூறிய செய்தியும்; மானிடர் கொற்றமும் - மனிதர்களான இராம இலக்குவர்களது வெற்றியும்; இருக்க - ஒரு புறம் இருக்கட்டும்; நிற்க - அவற்றை நீ சொல்வது நிற்கட்டும்; இரும்புரத்தினுள் - மாநகரமான இலங்கையுள்; தரும் தூது பகுந்த பின் - என்னிடம் பிறர் அனுப்பிய தூதுவனாக நீ வந்து புகுந்த பிறகு; நீ அரக்கரைக் கொன்றது - நீ அரக்கர்களைக் கொன்றது; என் கொல் அஃது உரையாய் - என்ன காரணத்தினால் ? அந்தக்காரணத்தைச் சொல்வாய்; என்றான் - என்று (அனுமனை நோக்கி) வினாவினான். அடா: ஏளனஅழைப்பு. (108) |