அனுமன் அளித்தவிடை 5913. | 'காட்டுவார் இன்மையால், கடி காவினை வாட்டினேன்;என்னைக் கொல்ல வந்தார்களை வீட்டினேன்;பின்னும் மென்மையினால் உன்தன்- மாட்டு வந்தது,காணும் மதியினால். |
காட்டு வார்இன்மையால் - உன்னை எனக்குக்காட்டுபவர் எவரும் இங்கு இல்லாமையால்; கடிகாவினை வாட்டினேன் - உன் காவல் சோலையை அழித்தேன்; என்னைக் கொல்ல வந்தார்களை வீட்டினேன் - (என் கருத்தை அறியாமல்) என்னைக் கொல்ல வந்த அரக்கர்களை அழித்தேன்; பின்னும் - அதன் பின்பும்; மென்மையினால் உன் தன் மாட்டு வந்தது - எளிமைப் பாட்டோடு உன்னிடத்து நான் வந்தது; காணும் மதியினால் - உன்னைக் கண்டு செய்தி கூற வேண்டும் என்ற எண்ணத்தால் (ஆகும்). 'மென்மையினால்உன் தன் மாட்டு வந்தது' - என்பது, 'என்னைக் கட்டும் திறம் நாக பாசத்துக்கு இல்லை' என்ற அனுமனது கருத்தைக் குறிப்பிக்கின்றது. கடிகா - நறுமணம் உள்ள சோலை என்றும் பொருள் கொள்ளலாம். (109) |