இராவணன் அனுமனைக்கொல்மின் என வீடணன் தடுத்தல் 5914. | என்னும்மாத்திரத்து, ஈண்டு எரி நீண்டு உக, மின்னும் வாள்எயிற்றன், சினம் வீங்கினான்; 'கொல்மின்' என்றனன்; கொல்லியர் சேர்தலும், 'நில்மின்' என்றனன், வீடணன் நீதியான். |
என்னும்மாத்திரத்து - (இவ்வாறு அனுமன்அஞ்சாமலும் அலட்சியமாகவும்) சொன்ன அளவில்; ஈண்டு எரி நீண்டு உக - நிறைந்த நெருப்பு நெடுந்தூரம் போய்ச்சிந்த; மின்னும் வாள் எயிற்றன் - ஒளி விடும் வாள் போலும் கோரப் பற்களை உடைய இராவணன்; சினம் வீங்கினான் கொல்மின் என்றனன் - சீற்றம் மிக்கவனாய் இந்தக் குரங்கைக் கொல்லுங்கள் என்று கட்டளையிட்டான்; கொல்லியர் சேர்தலும் - கொலையாளிகள் அனுமனை அடைதலும்; நீதியான் வீடணன் நில்மின் என்றனன் - நீதி நெறியில் நடப்பவனான வீடணன் 'நில்லுங்கள்' என்று சொல்லிக் கொலையாளியைத் தடுத்தான். அனுமனதுஅஞ்சாமையும் அலட்சியப் பேச்சும், இராவணனது சீற்றப் பெருக்கத்துக்குக் காரணமாயிற்று எனலாம். (110) |