5918. | 'பகைப் புலன் நணுகி, உயத்தார் பகர்ந்தது பகர்ந்து, பற்றார் மிகைப் புலன்அடக்கி, மெய்ம்மை விளம்புதல் விரதம் பூண்ட தகைப் புலக்கருமத்தோரைக் கோறலின், தக்கார் யார்க்கும் நகைப் புலன்பிறிது உண்டாமே ? நம் குலம் நவை உண்டாமே ! |
பகைப்புலன் நணுகி- பகைவர்களுடைய இடத்தை அச்சமில்லாது சேர்ந்து; உய்த்தார் பகர்ந்தது பகர்ந்து - தம்மை அனுப்பியவர் சொல்லிய செய்தியை உள்ளபடியே சொல்லி; பற்றார் மிகை புலன் அடக்கி - பகைவர் கொள்ளும் கோப உணர்ச்சியைத் தமது சொல்லாற்றலால் அடக்கி; மெய்ம்மை விளம்புதல் - உண்மையான சொல்லைச் சொல்லுதலையே; விரதம் பூண்ட தகைப்புலம் கருமத் தோரை - தமக்கு விரதமாகக் கொண்ட சீரிய அறிவையும் செய்கையும் உடைய தூதுவரை; கோறலின் - நீ கொல்லுதலினால்; தக்கார் யார்க்கும் நகைப்புலன் உண்டாமே - அறிவினாலும் ஒழுக்கத்தாலும் சிறந்த மேலோர் யாவர்க்கும் இகழ்ந்து சிரிப்பதற்கு இடம் உண்டாகுமே !; பிறிது நம் குலம் நவை உண்டாமே - மற்றும், நம் குலத்துக்குக் குற்றம் உண்டாகுமே!; ஏகாரம் இரண்டும்தேற்றம். தூதர் தன்மைகளும் செயல்களும் நன்கு விளக்கப்பட்டன. (114) |