இராவணன், அனுமன்வாலில் தீக் கொளுவப் பணித்தல் அறுசீர்ஆசிரியவிருத்தம் (வேறு) | 5921. | 'நல்லது உரைத்தாய், நம்பி ! இவன் நவையே செய்தான் ஆனாலும், கொல்லல்பழுதே'-'போய் அவரைக் கூறிக் கொணர்தி கடிது' என்னா, 'தொல்லை வாலை மூலம் அறச் சுட்டு, நகரைச் சூழ்போக்கி, எல்லை கடக்கவிடுமின்கள்' என்றான்; நின்றார் இரைத்து எழுந்தார். |
நம்பி ! நல்லதுஉரைத்தாய் - (வீடணன் கூறியதைக்கேட்ட இராவணன், அவனை நோக்கி) உத்தமனே ! நீ நல்ல செய்தியை எடுத்துக் கூறினாய்; இவன் நவையே செய்தான்; ஆனாலும் கொல்லல் பழுதே - இந்த வானரன், குற்றமே செய்தவன்; ஆனாலும்,(இவனை நாம்) கொல்வது குற்றமேயாகும்; (என்று கூறி விட்டு, பிறகு அனுமனை நோக்கி); போய் கூறி அவரை கொணர்தி கடிது என்னா - 'நீ சென்றுஅவர்களிடம் எனது நோக்கத்தைச் சொல்லி அவர்களை விரைவில் இங்கு போருக்கு அழைத்து வருவாய்' என்று சொல்லி, (பிறகு அங்கிருந்த அரக்கர்களை நோக்கி); தொல்லை வாலை - இந்தக் குரங்கின் தொல்லைக்கிடமான வாலை; மூலம் அற சுட்டு - அடியோடு அழியும்படி நெருப்பைக் கொண்டு எரித்து; நகரைச் சூழ் போக்கி எல்லை கடக்க விடு மின்கள் என்றான் - இவனை நம் நகரைச் சுற்றி இழுத்துச் சென்று, இந்த நகரின் எல்லையைக் கடந்து போம்படி துரத்திவிடுங்கள் என்று கட்டளையிட்டான்; நின்றார் இரைத்து எழுந்தார் - அருகே நின்ற அரக்கர்கள் ஆரவாரஞ் செய்து கொண்டு கிளம்பினார்கள். இராவணன்,வீடணனிடமும் அனுமனிடமும் அரக்கர்களிடமும் கூறியது அனைத்தும் தொகுத்துரைக்கப்பட்டது என்க. (117) |