5923.

நாட்டின்,நகரின், நடு உள்ள கயிறு நவிலும்
                            தகைமையவே-
வீட்டின் ஊசல்,நெடும் பாசம் அற்ற; தேரும், விசி
                           துறந்த;
மாட்டும் புரவிஆயம் எலாம், மருவி வாங்கும்
                           தொடை அழிந்த;
பூட்டும் வல்லிமூட்டோடும் புரசை இழந்த, போர்
                           யானை !

     வீட்டின் ஊசல்நெடும் பாசம் அற்ற - (அரக்கர்களால்கொண்டு
போகப்பட்டதனால்) வீடுகளில் உள்ள ஊஞ்சல்கள் தம் நீண்டகயிறுகள்
அற்றன; தேரும் விசி துறந்த - தேர்களும் கட்டுக் கயிறுகளை இழந்தன;
மாட்டும் புரவி ஆயம் எலாம் மருவி வாங்கும் தொடை அழிந்த -
பிணிக்கப்பட்ட குதிரைக் கூட்டம் எல்லாம், கட்டி வாங்கும் கயிறுகள் ஒழியப்
பெற்றன; போர் யானை பூட்டு வல்லி மூட்டோடும் புரசை இழந்த -
போர்த்திறம் அமைந்த யானைகள் முடிச்சுடன் இடும் காற்கயிறுகளும்,
கழுத்தில் கட்டப்படும் கயிறுகளும் இல்லையாயின (என்றால்); நாட்டின்
நகரின் நடு உள்ள கயிறு -
அந்த நாட்டுப் புறத்திலும் நகரத்திலும்
உள்ளனவான வெறுங்கயிறுகள்;  நவி்லும்  தகைமையவே -  சொல்லும்
தன்மையுடையன ஆகுமோ? (ஆகாது என்றபடி).

     அனுமனைக் கட்ட,கொண்டு வந்த கயிறுகள் பல திறப்பட்டனவாகும்.
இலங்கையில் கயிறு என்று காணப்பட்ட அனைத்தும் கொண்டு வரப்பட்டன
என்க.                                                   (119)