5924. | மண்ணில்கண்ட, வானவரை வலியின் கவர்ந்த, வரம் பெற்ற, எண்ணற்கு அரியஏனையரை இகலின் பறித்த- தமக்கு இயைந்த பெண்ணிற்குஇசையும் மங்கலத்தில் பிணித்த கயிறே இடை பிழைத்த- கண்ணில் கண்டவன் பாசம் எல்லாம் இட்டு, கட்டினார். |
மண்ணில் கண்ட -நிலவுலகில் கண்ட கயிறு வகைகளும்; வானவரை வலியின் கவர்ந்த - தேவர்களைத் தன் வலிமை காட்டி அபகரித்துக் கொண்டு வந்த பாசங்களும்; வரம் பெற்ற - வரங்களால் பெற்றிருந்த தெய்வத்தன்மைப் பாசங்களும்; எண்ணற்கு அரிய ஏனையரை இகலின் பறித்த - எண்ண முடியாத மற்றையோரிடத்தினின்று போரிட்டுப் பறித்துக் கொண்ட பாசங்களும் (ஆக); கண்ணில் கண்ட வன் பாசம் எல்லாம் இட்டு,கட்டினார் - தம் கண்ணால் பார்த்த வலிய கயிறுகள் எல்லாம் கொண்டுவந்து போட்டு அரக்கர்கள் அனுமனைக் கட்டினார்கள்; தமக்கு இயைந்தபெண்ணிற்கு இசையும் - தங்களுக்கு மனைவியராய்ப் பொருந்தியிருந்தபெண்களுக்கு அமைந்த; மங்கலத்தின் பிணித்த கயிறே இடை பிழைத்த - திருமாங்கல்யம் என்னும் தாலியில் பிணித்துக்கட்டியி்ருந்த கயிறே, அந்தச்சமயத்தில் அறுத்துக் கொண்டு போகப்படாமல் தப்பின. அரக்கியர்களின்தாலிக்கயிறு தவிர ஏனைய கயிறுகள் எல்லாவற்றையும் கொண்டு அரக்கர்கள் அனுமனைக் கட்டினார்கள் என்பதாம். (120) |