5925.

'கடவுள்-படையைக் கடந்து அறத்தின் ஆணை
                       கடந்தேன் ஆகாமே
விடுவித்துஅளித்தார், தெவ்வரே; வென்றேன்
                      அன்றே இவர் வென்றி;
சுடுவிக்கின்றது,"இவ் வூரைச் சுடுக" என்று
                      உரைத்த துணிவு' என்று,
நடு உற்று அமையஉற நோக்கி, முற்றும்
                      உவந்தான்-நவை அற்றான்.

     நவை அற்றான் -குற்றமற்றவனாகிய அனுமான்; கடவுள் படையை
கடந்து அறத்தின் ஆணை கடந்தேன் ஆகாமே -
தெய்வத்தன்மை உடையபிரம்மாத்திரத்தை மீறி, தருமநிலையைத் தவறினேனாகாதபடி;
தெவ்வரேவிடுவித்து அளித்தார் -
பகைவர்களாகிய அரக்கர்களே
(என்னைப்பிரம்மாத்திரத்
 தினின்றும்) விடுவித்துஉதவினார்கள்; இவர் வென்றி
வென்றேன் அன்றோ -
இவர் இது வரை அடைந்திருந்த வெற்றியை நான்
வென்று விட்டேன் அல்லனோ ?; சுடுவிக்கின்றது - இராவணன் என்னை
(அரக்கர்களைக் கொண்டு) வால் கொளுத்துகின்ற முயற்சி; இ ஊரை சுடுக
என்று உரைத்த துணிவு -
'இந்த ஊரை நீ எரிப்பாயாக' என்று எனக்குச்
சொன்ன தெளி பொருளாகும்; என்று - என்று எண்ணி; நடு உற்று
அமையம் உற நோக்கி -
அரக்கர்களின் நடுவில் இருந்து கொண்டு
(அவர்களிடத்தினின்று தான் அகல்வதற்குரிய) சமயத்தை எதிர்நோக்கி;
முற்றும் உவந்தான் -
நிரம்ப மகிழ்ச்சியுற்றான்.

     அனுமனது வாலில்நெருப்பு வைக்குமாறு இராவணன் அரக்கர்களுக்கு
இட்ட ஆணை, 'இலங்கை நகரைச் சுடுவாய்' என்று தனக்கு இராவணன்
அனுமதி கொடுத்ததாக எண்ணி அனுமான் மகிழ்ந்தான் என்க.         (121)