5926. | நொய்யபாசம் புறம் பிணிப்ப, நோன்மை இலன்போல் உடல் நுணங்கி, வெய்ய அரக்கர்புறத்து அலைப்ப, வீடும் உணர்ந்தே, விரைவு இல்லா ஐயன்,விஞ்சைதனை அறிந்தும் அறியாதான்போல், அவிஞ்சை எனும் பொய்யைமெய்போல் நடிக்கின்ற யோகி போன்றான்; போகின்றான். |
நொய்ய பாசம்புறம் பிணிப்ப - வலிமையற்ற கயிறுகள்தனது உடலைக்கட்ட ; நோன்மை இலன் போல் உடல் நுணங்கி - (அதனை அறுக்கும்) ஆற்றல் அற்றவன் போன்று உடம்புது வண்டு; வெய்ய அரக்கர் புறத்து அலைப்ப - கொடிய அரக்கர்கள் தன்னைச் சூழ்ந்து நின்று இழுத்து வருத்த,; வீடும் உணர்ந்தே - அப்பிணிப்பினின்றும் விடுவித்துக் கொள்ளும் வழியை அறிந்தவனாயிருந்தும்; விரைவு இல்லா ஐயன் - அதனைச் செயலாற்றுவதில் விரைவு காட்டாத அனுமன்; விஞ்சைதனை அறிந்தும் அறியாதான் போல் அவிஞ்சை என்னும் பொய்யை மெய் போல் நடிக்கின்ற - தத்துவ ஞானம் விளைக்கும் பிரம வித்தையை அறிந்திருந்தும், (அதனை) அறியாதவன் போல், அவித்தை என்கின்ற பொய்ப் பொருளை மெய்ப்பொருள் போல எண்ணிக் கொண்டு வெளிக்குக் காட்டி ஒழுகுகின்ற யோகியைஒத்தவனாய்; போகின்றான் - தன்னையிழுக்கின்ற அவர்களுடன் செல்வானாயினான். மெய்யுணர்வுஇல்லாத உலகத்தினருடன் ஒத்து நடந்து அவர் சென்ற வழிச் சென்று அவரை நல்வழிப்படுத்த முயல்வது தத்துவ ஞானியரான யோகியரின் இயல்பு. அது போன்று அரக்கர்களது பிணிப்புக்கு அடங்கி, அவர்கள் சென்ற வழி எல்லாம் அனுமன் சென்றான் என்க. அவிஞ்சை - அவித்தை; அஞ்ஞானம். (122) |