5931.

'தாயே அனைய கருணையான் துணையை, ஏதும்
                   தகைவு இல்லா
நாயே அனைய வல்அரக்கர் நலியக் கண்டால்,
                    நல்காயோ ?
நீயே உலகுக்கு ஒருசான்று; நிற்கே தெரியும்
                    கற்பு;-அதனில்
தூயேன் என்னின்,தொழுகின்றேன்,-எரியே!-
                  அவனைச் சுடல் !' என்றாள்.

     எரியே - (பிராட்டிஅக்கினி தேவனை நினைத்து) ஏ! நெருப்புக்
கடவுளே!; தாயே அனைய கருணையான் துணையை - (எல்லா
உயிர்களிடத்தும்) தாய் போன்று அருள் புரியும் இராமபிரானுக்கு
உயிர்த்துணைவனான அனுமனை; ஏதும் தகைவு இல்லா - சிறிதும்
பெருமைக்குணம் இல்லாத; நாயே அனைய - நாய் போல இழிந்த; வல்
அரக்கர் நலிய கண்டால் -
கொடிய அரக்கர்கள் துன்புற்ற நீ பார்த்தால்;
நல்காயோ -
அவனுக்கு அருள் செய்ய மாட்டாயோ ?; நீயே உலகுக்கு ஒரு
சான்று நிற்கே கற்பு தெரியும் -
நீதான், உலகம் அனைத்துக்கும் ஒப்பற்ற
சாட்சியாக விளங்குபவன்; (ஆதலால்) உனக்கே எனது கற்பு நிலை தெரியும்;
அதனில் தூயேன் என்னின் அவனை சுடல் -
அந்தக் கற்புத் திறத்தில்
நான் தூய்மை உடையவள் என்பது உண்மையானால், அந்த அனுமனை நீ
சுடாதே; தொழுகின்றேன் - உன்னை வணங்கிக் கேட்டுக் கொள்கின்றேன்;
என்றாள் - என்று உறுதியிட்டுக் கூறினாள்.

     பிராட்டிஅக்கினி தேவனிடம், அனுமனைச் சுட்டு வருத்தக் கூடாது
என்று கேட்டுக் கொண்டாள் என்க.                            (127)