அனுமன் மேலெழஅரக்கர் தோள் அற்று விழுதல் 5937. | முழுவதும் தெரிய நோக்கி, முற்றும் ஊர் முடிவில் சென்றான், 'வழு உறு காலம்ஈது' என்று எண்ணினன், வலிதின் பற்றித் தழுவினன், இரண்டுநூறாயிரம் புயத் தடக் கை தாம்போடு எழு என நால,விண்மேல் எழுந்தனன்; விழுந்த எல்லாம். |
முழுவதும் தெரியநோக்கி - அந்த இலங்கை நகர்முழுவதையும் நன்றாகப் பார்த்துக் கொண்டே; ஊர் முற்றும் முடிவில் சென்றான் - நகர் முழுவதும் சுற்றிக் கடை எல்லையில் சென்றவனான அனுமான்; வழு உறு காலம் ஈது என்று எண்ணினன் - தப்பிப் போதற்குரிய சமயம் இதுதான் என்று எண்ணி,; வலிதின் பற்றி தழுவினன் - (இரு புறத்துக் கயிறுகளையும்) வலியப் பிடித்து, (இரு புறத்து விலாவிலும் சேர) இடுக்கிக் கொண்டு; இரு நூறாயிரம் புயம் தடம் கை தாம் போடு எழு என நால - இரண்டு இலட்சம் தோள்களும் பெரிய கைகளும் இரு புறத்துக் கயிற்றுடனே தூண் போலத் தொங்கும்படி; விண் மேல் எழுந்தனன் - வானின் மேல் உயர் எழும்பினான்; எல்லாம் விழுந்த - அவ்வரக்கர் கூட்டம் எல்லாம் கீழே விழுந்தன. இலங்கை நகர்முழுவதையும் காணுதல் மூலம், தனது கருத்தை நிறைவேற்றிக் கொண்ட அனுமன்,திடீரென மேலே எழும்பினான். அப்போது, அவனைக்கயிற்றொடு பற்றியிருந்த அரக்கர் கூட்டம் கீழே விழுந்தன என்க. புயத்திற்குஎழு (தூண்) உவமை. (133) |