மாதர்கள் வருந்தியவகை 

5945.

மணியின்ஆய வயங்கு ஒளி மாளிகை,
பிணியின் செஞ்சுடர்க் கற்றை பெருக்கலால்,
திணி கொள் தீஉற்றது, உற்றில, தேர்கிலார்
அணி வளைக் கைநல்லார், அலமந்துளார்.

     மணியின் ஆயவயங்கு ஒளி மாளிகை - இரத்தினங்களால்
அமைக்கப்பட்ட விளங்குகின்ற ஒளியை உடைய மாளிகைகள்; பிணியின்
செஞ்சுடர் கற்றை பெருக்கலால் -
தொகுதியாக, செந்நிறமான ஒளியின்
திரளை வீசுவதால்; திணி கொள் தீ உற்றது உற்றில தேர்கிலார் -
நெருக்கங்கொண்ட நெருப்பு பிடித்த இடத்தையும் பிடியாத இடத்தையும்
தெரிந்துகொள்ள முடியாதவர்களாய்; அணிவளைக்கை நல்லார் அலமந்து
உளார் -
அழகிய வளையல்களை அணிந்த மகளிர்கள் இன்னது
செய்வதென்றுஅறியாமல் குழப்பமுற்று வருந்தினர்.

     மாளிகை வீசும் மணி ஒளிக்கும், தீ பரவிய செஞ்சுடர் ஒளிக்கும்
வேற்றுமை காணாது, மகளிர்கள் மயங்கி வருந்தினர் என்பது கருத்து.     (3)