| 5950. | நீலம்நின்ற நிறத்தன, கீழ் நிலை மாலின் வெஞ்சின யானையை மானுவ; மேல் விழுந்துஎரி முற்றும் விழுங்கலால் தோல் உரிந்துகழன்றன, தோல் எலாம். |
நீலம் நின்றநிறத்தன - கருநிறம்பொருந்தியனவாய் இருந்த; தோல் எலாம் - யானைகள் எல்லாம்; மேல் எரி விழுந்து முற்றும் விழுங்கலால் -தம்மீது நெருப்பு விழுந்து உடம்பு முழுவதும் பற்றிக் கொண்டதனால்; தோல் உரிந்து கழன்றன - தோல்கள் உரிந்து நீங்கப் பெற்றவையாய்; கீழ் நிலை மாலின் - கிழக்குத் திசையில் உள்ள இந்திரனுடைய; வெம்சின யானையை மானுவ - கொடிய கோபத்தோடு கூடிய ஐராவதம் என்னும் (வெள்ளை) யானையை ஒத்தனவாயின. தீப்பற்றியதனால் தோல் உரிந்து வெள்ளெலும்பு தோன்ற நின்ற யானைகள், இந்திரனுடைய ஐராவதம் என்ற வெள்ளை யானையை ஒத்திருந்தன என்க. மால் - இந்திரன். (8) |