5952.

பொடித்துஎழுந்து பெரும் பொறி போவன
இடிக் குலங்களின்வீழ்தலும், எங்கணும்
வெடித்த; வேலை வெதும்பிட, மீன் குலம்
துடித்து, வெந்து,புலர்ந்து, உயிர் சோர்ந்தவால்.

     பொடித்து எழுந்துபோவன பெரும் பொறி - (நெருப்பினின்றும்)
சிதறி எழுந்து போவனவாகிய பெரிய தீப்பொறிகள்; இடி குலங்களின்
எங்கணும் வீழ்தலின் -
இடிக்கூட்டம் போல எல்லா இடங்களிலும் வீழ்ந்த
அளவில்; வெடித்த வேலை - வெடி ஓசை போன்ற ஓசையை உடைய கடல்,;
வெதும்பிட மீன் குலம் துடித்து - கொதிப்படைய அக்கடலில் உள்ள மீன்
கூட்டங்கள் (வெப்பம் தாங்காமல்) துடித்து; வெந்து, புலர்ந்து உயிர்
சோர்ந்த-
தாபமடைந்து வாடி, உயிர் ஒடுங்கி இறந்தன.

     நெருப்புப்பொறிகள் எல்லா இடங்களிலும்விழுந்ததனால், கடல்
கொதித்தது; அதனால், அங்கிருந்த மீன்குலம் வெப்பம் தாங்காமல்,
துடிப்புண்டும் வெந்தும் காய்ந்தும் இறந்தன என்பதாம்.               (10)