5953.

பருகு தீமடுத்து, உள்ளுறப் பற்றலால்,
அருகு நீடிய ஆடகத்தாரைகள்
உருகி, வேலையின்ஊடு புக்கு உற்றன,
திருகு பொன்நெடுந் தண்டின் திரண்டவால்.

     பருகு தீ -(தன்னிடம் கிடைப்பன யாவற்றையும்) பருகும் (அழிக்கும்)
இயல்பினை உடைய நெருப்பு; மடுத்து - சூழ்ந்து நிறைந்து; உள் உற
பற்றலால் -
(பொன் மாளிகைகளின்) உள்ளே புகுந்து எரித்தலால்; உருகி
அருகு நீடிய ஆடக தாரைகள் -
உருகிப் பக்கங்களில் பெருகிய பொன்னின்
ஒழுக்குகள்; வேலையின் ஊடுபுக்கு உற்றன - கடலின் அகத்தே
புகுந்தவைகளாய்; திருகு பொன் நெடும் தண்டின் திரண்ட - முறுக்குகள்
அமைந்த நீண்ட பொற்பாளங்களாக இறுகின.

     நெருப்பு, மடுத்துபொன்மாளிகையில் புகுந்து எரித்ததால், பொன்
ஒழுக்கு, கடலின் நீரில் சேர்ந்து, மறுபடியும் இறுகி பாளங்களாக மாறிற்று.
நெருப்பு சூட்டில் உருகிய பொன், தண்ணீரின் குளிர்ச்சியில் இறுகிற்று. தண்டு
- கட்டிப்பட்ட பாளம்; திரள்தல். இறுகுதல்.                        (11)