5955. | கல்லினும்வலிதாம் புகைக் கற்றையால் எல்லி பெற்றது,இமையவர் நாடு; இயல் வல்லி கோலிநிவந்தன; மா மணிச் சில்லியோடும் திரண்டன, தேர் எலாம்.+ |
கல்லினும்வலிதாம் புகைக் கற்றையால் - கல்லைக்காட்டிலும் செறிவுள்ளதான புகைத் தொகுதி பரவிச் சூழ்தலால்; இயல்வல்லி கோலி நிவந்தன இமையவர் நாடு - அழகிய கற்பகக் கொடி போன்ற கொடிகள் சுற்றி உயர்ந்த பொன்மயமான தேவலோகம்; எல்லி பெற்றது - இருள் அடைந்தது; தேரெலாம் மாமணி சில்லியோடும் திரண்டன - தேர்கள் எல்லாம் சிறந்த இரத்தினங்களால் இழைக்கப் பெற்ற தம் உருளைகளோடும் (அத்தீயால் ஒன்றாகச் சேர்ந்து உருகி) ஒரே தொகுதியாக அமைந்தன. தேர்கள்பொன்னால் அமைந்தமையால், தீயில் உருகி அவை உறுப்பு வேறுபாடின்றி ஒன்றாகத் திரண்டன என்க. (13) |