5956. | பேயமன்றினில் நின்று, பிறங்கு எரி, மாயர் உண்ட நறவுமடுத்ததால்; தூயர் என்றிலர்வைகு இடம் துன்னினால், தீயர்;அன்றியும், தீமையும் செய்வரால். |
பிறங்கு எரி பேயமன்றினில் நின்று - விளங்குகின்ற தீயானதுகள் முதலிய குடிக்கும் பொருள் பொருந்திய சாலையில் புகுந்து; மாயர் உண்ட நறவு மடுத்தது - வஞ்சனைத் தொழில் மிக்க அரக்கர் உண்டு எஞ்சிய கள்ளையும் குடித்தது; தூயர் என்றிலர் வைகு இடம் துன்னினால் - பரிசுத்தமானவர்என்று சொல்லத்தகாதவர் இருக்கும் இடத்தை (தூயவர்) சென்றடைந்தால்; தீயர் அன்றியும் தீமையும் செய்வர் - (தூயவர்) தீயவராகுவர் அத்தோடு தாமும் தீச் செயல்களைச் செய்பவர்களும் ஆவார்கள். தூயவர், தீயவர்தங்கும் இடம் சென்றால், தீயவராகி விடுவர். தீய செயல்களையும் செய்வர். 'தூயது என்று எவராலும் போற்றப்படும் நெருப்பு, கட் குடிலைப் பற்றியதனால், அரக்கர் உண்டு எஞ்சிய கள்ளையும் குடித்தது' என்ற செயலின் மூலம் வாழ்க்கைத் தத்துவம் விளக்கப் படுகின்றது. பேயம் - கள் முதலிய குடிக்கும் பொருள்; மன்று - இடம். (சாலை) 'ஆல்' இரண்டும் அசைநிலைகள். (14) |