5958. | ஊனில்ஓடும் எரியொடு உயங்குவார், 'கானில் ஓடும்நெடும் புனல் காண்' எனா, வானில் ஓடும்மகளிர் மயங்கினார், வேனில் ஓடு அருந்தேரிடை வீழ்ந்தனர்.* |
ஊனில் ஓடும்எரியொடு உயங்குவார் - உடல்முழுதும் தீப்பற்றி எரிய வருந்துபவர்களாய்; வானில் ஓடும் மகளிர் - (தப்பி உய்தற் பொருட்டு) வானத்தில் எழுந்து ஓடும் அரக்க மாதர்கள்; கானில் ஓடும் நெடும் புனல் காண் எனா - காட்டிலே ஓடுகின்ற நீண்ட ஆற்று வெள்ளமேகாண் என்று; மயங்கினார் - மாறாகக் கருதியவர்களாய்; வேனில் ஓடும் அருந்தேரிடை வீழ்ந்தனர் - வேனிற்காலத்தில் நீர் ஓடுவது போலத் தோன்றும் அரிய பேய்த் தேரிடையே விழுந்தார்கள். நெருப்பு, பற்றியதனால் உடல் வருந்தி, அதனின்றும் உய்வதற்கு வானை நோக்கி மேல் எழுந்த மகளிர், கீழே காணும் வெப்பத்தை, காட்டில் ஓடும் நீர்ப் பெருக்கு என மாறாகக் கருதி, அக்கானல் நீரில் விழுந்தனர். வேனிற் காலத்தில் பரந்த வெளியில் உள்ள சூரிய வெப்பம், நீர்ப் பெருக்கு போன்று தோன்றும். இதற்குக் 'கானல் நீர்' என்று பெயர். இதுவே பேய்த்தேர் எனப்படும். (16) |